தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவிந்தன்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்யம். இவரது மகன் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அவர் ஆயுத பூஜையை முன்னிட்டு, நேற்று மாலை தனது நண்பர்களுடன் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது ஆற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில், நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் தகவல் கூறியதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சிறுவனை தேடும் பணியில் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், உத்தமபாளையம் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் ஆற்றில் நீரை நிறுத்தி, துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குமுளி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
இதையும் படிங்க: குற்றாலத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்.. போலீஸ் வலையில் சிக்கிய சொகுசு விடுதி மேலாளர்!