தேனி: வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேனி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் தலைமையில் நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் விபரங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்ப்புத் தெரிவித்த, தேனி மாவட்ட பாஜக நிர்வாகிகள் சிலரை அம்மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கடந்த டிச.10 ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாவட்ட தலைவரின் செயல்பாடுகளைக் கண்டித்தும், நாடாளுமன்ற பொறுப்பாளர்களை மாற்றக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் முருகன் தலைமையிலான பாஜக நிர்வாகிகள், தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பாஜக கட்சிக்கு அவதூறு ஏற்படுத்துவதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பாஜக நிர்வாகிகள் மீது புகார் அளித்தனர்.
மேலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செந்தில்குமார் என்பவர் தன்னுடன் சில நபர்களைச் சேர்த்துக்கொண்டு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக, சமூக வலைத்தளங்களில் எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பி வருவதாகவும், தேனி மாவட்ட பாஜகவில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் இன்று (டிச.12) அளித்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரக்கூடிய நிலையில், தேனி மாவட்ட பாஜக நிர்வாகிகள் மோதலால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்புக்கு பணிச்சுமை காரணமல்ல - டீன் தேரணி ராஜன் விளக்கம்..