தேனி: ஏழை எளிய பொதுமக்கள் பயன்படும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய அம்மா உணவகம், அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தேனி பெரியகுளம் தென்கரை மார்க்கெட் பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அம்மா உணவகத்துக்கு பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக சமையல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அம்மா உணவகத்தில் பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழுவினர் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும் சமையல் பொருட்களை, அங்கிருந்து வெளி நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சமையல் பொருட்களை ஏற்றிச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: புழல் மகளிர் சிறையில் பெண் கைதி தற்கொலை!
மேலும், அம்மா உணவகத்தில் தொடர்ந்து தரம் இல்லாத உணவு வழங்குவதாகவும், அங்குள்ள பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள் தரமற்ற முறையில் வழங்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழும்பி வருகின்றன.
மேலும், இது குறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். உணவகத்தில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகள் கவனத்திற்கு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு