தேனி: வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் பாசன பகுதிகளுக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று (நவ.23) முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரையில், 3 கட்டங்களாக திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், தற்போது 67 அடியை எட்டியுள்ளது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட பாசனத்திற்காக 2,000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதி விவசாயிகள், தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை, ராமநாதபுரம் பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து, இன்று முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடை பாதிப்பு; ரூ.7 கோடி மதிப்பில் புதிய திட்டத்திற்கு பரிந்துரை - அமைச்சர் முத்துசாமி தகவல்!
இந்த உத்தரவின்படி, முதல்கட்டமாக சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் தண்ணீர், அணையின் பிரதான மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக 4 ஆயிரம் கன அடி சேர்த்து, மொத்தமாக 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணையிலிருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேறுவதால், அணையின் முன்பாக இரண்டு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. வைகை பூர்வீக பாசனப்பகுதி 3-க்கு இன்று முதல் 29ஆம் தேதி வரையிலும், பூர்வீக பாசன பகுதி 2க்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையிலும், பூர்வீக பாசன பகுதி 1க்கு டிசம்பர் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையிலும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 3 கட்டமாக சேர்த்து வைகை அணையிலிருந்து மொத்தமாக 2,466 மில்லியன் கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வைகை ஆற்றில் அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த 6 மருந்தகங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து!