தேனி: இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து சென்னையில் இன்று (செப் 8) உயிரிழந்தார். அவரது உடல் இறுதிச்சடங்கு செய்வதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மாரிமுத்து தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மலை கிராமமான பசுமலைத் தேரியில் கடந்த 1967ஆம் ஆண்டு பிறந்தவர். குருசாமி - மாரியம்மாள் தம்பதிக்கு பிறந்த நடிகர் மாரிமுத்து, நான்கு மூத்த சகோதரிகள் மற்றும் மூன்று இளைய சகோதரர்கள் என 8 பேருடன் பிறந்தவர். இவரது தந்தை மற்றும் கடைசி தம்பி நைனார் ஆகியோர் இறந்து விட்டனர்.
மலை கிராமத்தில் பிறந்து சிரமப்பட்டு இருந்தாலும், குடும்பத்தினரால் மயிலாடும்பாறை பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்க வைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து சிவகாசியில் உள்ள பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த அவர், சினிமாவில் அதிக நாட்டம் கொண்டிருந்துள்ளார்.
அதற்காக கல்லூரி படிப்பு முடிவதற்கு முன்பாகவே, இரவில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது கரிகட்டையால் சுவற்றில், “நான் சினிமாத்துறைக்குச் செல்வதற்கு சென்னைக்கு செல்கிறேன்” என எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அங்கு, தனியாக சிரமப்பட்டு சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பு பெற்று, இன்று முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், சிறந்த நடிகராகவும், இயக்குநராகவும் பல படங்களுக்கு உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வந்த நடிகராக இருந்த மாரிமுத்து, மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலை உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல் இன்று மாலை சென்னையில் இருந்து இரவிற்குள் சொந்த ஊரான பசுமலைத் தேரிக்கு கொண்டு வரப்பட்டு, நாளை காலை 12 மணியளவில் அவரது உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மலை கிராமத்தில் இருந்து கடினப்பட்டுச் சென்று, சினிமாத் துறையில் சிறந்து விளங்கிய மாரிமுத்துவின் உயிரிழப்பு தங்களுக்கு பேரிழப்பு என அவரது கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: "மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்" - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!