தேனி: தமிழக முன்னாள் முதலமைச்சர் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. 1917ஆம் ஆண்டு இலங்கை கண்டியில் பிறந்த எம் ஜி ராமச்சந்திரன் பின்னாளில் தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழக மக்கள் நெஞ்சங்களில் இடம்பெற்றார். பின் அரசியலில் வந்து தமிழக முதலமைச்சராகவும் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சேவையாற்றி வந்தார்.
1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்று இன்றோடு 35 ஆண்டுகள் ஆகிறது. அவர் மறைந்து ஆண்டுகள் பல கடந்தாலும் அவர் நினைவுகள் இன்னும் மக்கள் மனதை விட்டு கடக்கவில்லை என்பதற்கு உதாரணமாகத் தேனியே சேர்ந்த ராஜதாசன் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.
தேனி மாவட்டம் தேனியில் வசித்து வருபவர் ராஜதாசன்(58) இவர் தேனி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தங்கும் விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர் தனது சிறு வயது முதலே எம்ஜிஆரின் கருத்துக்களால் கவரப்பட்டு அவர் குறித்த புகைப்படங்களைச் சேகரிப்பதும் எம்ஜிஆர் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் ஏற்பட்டுச் சேகரித்து வந்துள்ளார்.
தனக்கு கிடைக்கும் சம்பளப் பணத்தில் பெரும் பகுதியை எம்ஜிஆரின் குறித்த புத்தகங்களை வாங்குவதிலும் அவரின் புகைப்படங்களைச் சேகரிப்பதிலுமே செலவழித்து வந்துள்ளார். எம்ஜிஆர் எங்கெங்கெல்லாம் பிரச்சாரக் கூட்டங்கள் மேடை நாடகங்கள் நடத்துகிறாரோ அங்கெல்லாம் தான் சேர்த்து வைத்திருந்த அரியவகை புகைப்படத்துடன் எம்ஜிஆரை சந்திப்பதற்காகப் புறப்பட்டு விடுவார்.
எம்ஜிஆர் படங்களில் பேசும் கருத்துக்களை தன் வாழ்க்கையில் தொடர்புப்படுத்தி தனக்கென அமைத்து அதனைப் பின்பற்றி வரும் எம்ஜிஆர் ரசிகர் ஆன இவரை எம்ஜிஆரின் என்சைக்ளோபீடியா என்றும் மக்கள் இவரை அழைக்கின்றனர். 1936 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடித்த முதல் திரைப்படம் ஆன சதிலீலாவதி முதல் நல்லதை நாடு கேட்கும் திரைப்படம் வரை உள்ள புகைப்படங்களைச் சேகரித்து வைத்துள்ளார்.
இவரிடம் எம்ஜிஆர் நடித்த அனைத்து திரைப்படங்களின் சி டி டிவிடிகளை சேகரித்து வைத்துள்ளார். திரைப்படத்தில் எம்ஜிஆர் தோன்றிய காட்சிகளில் வெளிவந்த புகைப்படங்கள், பின்பு அரசியலில் எம்ஜிஆர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்களும் அரசியல் கட்சித் தலைவர்களை எம்ஜிஆர் சந்திக்கும் புகைப்படங்களும் எம்ஜிஆர் எழுதிய அரிய வகை கடிதங்களும் அறிய வகை புகைப்படங்களையும் சேகரித்து வைத்திருந்தார்.
நடிகர் சிவாஜி, ஜெய்சங்கர் மற்றும் பல நடிகர்களுடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள், இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் ராஜீவ்காந்தி, மொரார்ஜி தேசாய் ஆகியோருடன் உரையாடும் புகைப்படங்கள், தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடித்த முரசே முழங்கு என்னும் நாடகத்தை எம்ஜிஆர் தலைமை தாங்கி நடத்திய எம்ஜிஆர் ஸ்டாலின் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைத்துள்ளார்.
மேலும், எம்ஜிஆருக்குத் துப்பாக்கிச் சூடு சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் புகைப்படம் உள்ளிட்டவை வைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள புரூஸ்லீ மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த எம்ஜிஆர் மருத்துவர்களுடன் உரையாடும் அரிய புகைப்பட காட்சிகளும் ராஜதாசனின் கலெக்ஷனில் இடம்பெற்றிருந்தது.
இது குறித்து ராஜதாசன் கூறும்போது, “என் சிறுவயதில் நான் முதன் முதலில் பார்த்த எம்ஜிஆர் படமான 1967-ல் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை அந்த படம் பார்த்த முதல் எம்ஜிஆரின் ரசிகனாக மாறினேன். அநீதிகளை தட்டிக் கேட்பது பெரியவர்களை மதிப்பது இளைஞர்களுக்கு நல் வழிகளை காட்டுவது போன்ற காட்சிகள் என்னை கவர்ந்து அவரின் தீவிர ரசிகராக மாற்றியது. அன்றிலிருந்து இன்று வரை வார இதழ் மாத இதழில் வெளியாகும் அவர் புகைப்படம் எங்கிருந்தாலும் அதை சேகரிக்க தொடங்கினேன்.
எம்ஜிஆரை நேரில் சந்தித்தபோது எனக்கு அவர் நினைவாக அவரின் கேமராவை பரிசாக அளித்தார் தர்மம் தலைகாக்கும் படத்தில் பயன்படுத்திய ஜப்பான் கேமரா அது, தற்போது வரை அதை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். சென்னை தலைமைச் செயலகத்தில் எம்ஜிஆரின் புகைப்படங்களை வரலாறுகள் ஆகியவை வைத்து அருங்காட்சியம் அமைத்தால் எம்ஜிஆரை தெரிந்து கொள்ள வரக்கூடிய இளைஞர்களுக்கு நல் வாய்ப்பாக அமையும்” என்ற கோரிக்கையும் முன் வைத்தார்.
‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்பும் என் பேச்சிருக்கும்’ என்ற எம்ஜிஆர் பாடல் வரிகளுக்கு ஏற்ப அவர் மறைந்து 35ஆண்டுகள் கடந்தும் இன்றும் அவரின் பேச்சு ராஜதாசன் போன்றோர் உருவத்தில் எம்ஜிஆரின் பேச்சுக்கள் கருத்துக்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இதையும் படிங்க: ஒரு திரைப்படத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் - விஜய் சேதுபதி!