தேனி: பெரியகுளம் அருகே உள்ள காந்திநகர் அனுமார் கோவில் பகுதியைச் சேர்ந்த, மைக் செட் உரிமையாளர் ஆனந்தகுமார் என்பவர், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பெரியகுளம் அழகர்சாமிபுரத்தில் மைக் செட் அமைத்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் அவரது நண்பர்கள் ஹரி கிருஷ்ணன், அரவிந்த் ஆகியோருடன் வீடு திரும்பியுள்ளார்.
அப்பொழுது பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பகுதியில், பஷீர் அகமது என்ற இளைஞர் மது போதையில் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாகச் சாலையில் வெடி வைத்துள்ளார். அச்சமயம், அவ்வழியே சென்ற ஆனந்தகுமார் ஹாரன் அடித்தும், பஷீர் அகமது வெடியை வெடிக்கச் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின் கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சாலையில் வெடி வைத்துக் கொண்டிருந்த பஷீர் அகமது தனது வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து ஆனந்தகுமாரை தாக்கியுள்ளார். இதில் கழுத்தில் பலத்தில் காயம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அதன் பின்னர் காயமடைந்த ஆனந்தகுமாரை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காகப் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, கழுத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தகுமாரை மேல் சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, புத்தாண்டு கொண்டாடத்தின் போது மது போதையில், மைக் செட் உரிமையாளரை, கத்தியால் குத்திய இளைஞர் பசீர் அகமது என்பவரைக் காவல் துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.