தேனி: மஞ்சளாறு அணையின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக அங்கு நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.1) அணையின் முழுக் கொள்ளவான 57 அடியில் தற்போது நீர் மட்டம் 55 அடியை எட்டியதால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மஞ்சளாறு ஆற்றின் கரையோரம் உள்ள தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, தும்மளப்பட்டி, வத்தலக்குண்டு, விருவீடு உள்ளிட்டப் பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், அணையின் பாதுகாப்புக் கருதி அணைக்கு வரும் 644 கன அடி நீரும் முழுமையாக ஷட்டர் பகுதியின் வழியாக வெளியேற்றப்படுகிறது. கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக முழுமையாக நிரம்பிய மஞ்சளாறு அணை, தற்போது மீண்டும் ஒருமுறை நிரம்பியதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.