தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீரானது மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது.
தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதாவது 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததை அடுத்து, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 3வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
நேற்று காலை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தபோது, முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தபோது 2வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது வைகை அணையின் நீர்மட்டமானது 69 அடிக்கு மேல் உயர்ந்ததால், 3வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தும் சுமார் 13 ஆயிரத்து 145 கன அடியாக உள்ளது. ஆகையால், அணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரத்து 169 கன அடி நீரானாது வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நீர்இருப்பு விநாடிக்கு 5 ஆயிரத்து 579 மில்லியன் கன அடியாக உள்ளது.
தற்போது 3ம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்டங்களிலும் வைகை ஆற்றுக்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.