நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டாவது குற்றவாளியான சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் ஜாமினில் வெளியில் உள்ளனர்.
இந்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் இரண்டாவது சாட்சியான பஞ்சம் விஷ்வகர்மா, மூன்றாவது சாட்சியான சுனில் தாபா ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் முதல் மற்றும் முக்கியச் சாட்சியான கிருஷ்ணா தாபா இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரண்டு மற்றும் மூன்றாம் சாட்சிகளை விசாரிக்கக் கூடாது என்று கூறினார்.
இந்நிலையில் கோடநாடு வழக்கின் முக்கியச் சாட்சியும், கொள்ளைச் சம்பவத்தை நேரடியாக பார்த்தவருமான கிருஷ்ண தாபா திடீரென ஆஜரானார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் நந்தகுமார் முதல் சாட்சியான கிருஷ்ண தாபாவிடம் கொலை நடந்தது எப்படி, எங்கு காயம் ஏற்பட்டது உட்பட அனைத்தையும் கேட்டு, சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ண தாபாவின் செல்போன், அவர் உடுத்தியிருந்த ஆடைகள் குறித்து கேள்வி கேட்டார். பின்னர் அந்தப் பொருள்களை அவரிடம் காண்பித்து அதனை உறுதி செய்துகொண்டார்.
நீதிபதி வடமலை முதல் சாட்சி கூறியவற்றை பதிவு செய்ததோடு தான் கூறியது சரிதான் என்று உறுதிப்படுத்தும் வகையில் கிருஷ்ண தாபாவிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டார். பின்னர் மாலையில் நடைபெற்ற சாட்சி விசாரணையில் முக்கியச் சாட்சி கிருஷ்ண தாபா, சயான், வாளையார் மனோஜ், தீபு, பிஜின் குட்டி , உதயன் ஆகிய ஐந்து குற்றவாளிகளை அடையாளம் காண்பித்தார்.
அதன்பிறகு நான்காவது சாட்சியான டிரைவர் யோகநாதன் என்பவரைச் சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரணை நடத்தினர். அவர் காயமடைந்த கிருஷ்ணா தாபாவை கோத்தகிரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சையளித்தது குறித்து சாட்சியளித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி வடமலை, கோடநாடு கொலை வழக்கு சாட்சி விசாரணை மீண்டும் பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கும் என்று கூறி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:
கோடநாடு கொலை வழக்கு - அரசு தரப்பு ஆள்மாறாட்டம் செய்ய முயற்சிப்பதாக புகார்!