நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரை சுற்றியுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து வன விலங்குகள் மனிதர்களை தாக்கி வருவது அதிகமாகியுள்ளது. இந்நிலையில், கூடலூரை அடுத்துள்ள தேவாலாட்டி பகுதியில் வசிக்கும் கார்த்தி என்ற இளைஞரையும் , முதுகுலி பகுதியில் வசிக்கும் சுப்பன் செட்டி என்ற முதியவரையும் வீட்டை விட்டு வெளியில் வரும் போது அங்கு வந்த காட்டு யானை தந்தத்தால் குத்தியுள்ளது. இதில் பலத்த படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக வனத்துறை வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் இருவரையும் மேல் சிகிச்சைக்காக கேரளா கொண்டு செல்ல வேண்டிய நிலையில், அரசு மருத்துவமனையில் உள்ள 7க்கும் மேற்பட்ட அம்புலன்ஸ் பழுது எற்பட்டதைக் காரணம் காட்டி மருத்துவமணை ஊழியர்கள் மெத்தனம் காட்டினர். இந்நிலையில், உடனிருந்த உறவினர்கள் வேறு வழியின்றி தனியார் அம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக இருவரையும் கேரளா கொண்டு சென்றனர். ஓரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு பேரை காட்டு யானை தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.