நீலகிரி மக்களவைத் தொகுதியில் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 104 ஆவது வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக காலை 7 மணிக்கு முன்னரே வந்து காத்திருந்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாதிரிவாக்குப் பதிவை சரிபார்த்து, முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவை துவங்கியபோது வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் பெண்கள் உட்பட் 75க்கும் மேற்பட்டோர் வரிசையாக காத்திருந்தனர். ஒன்றரை மணி நேரமாக அதிகாரிகள் போராடியும் மின்னணு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய முடியவில்லை.
வாக்களிப்பதற்காக வெகுநேரமாக வெயிலில் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தேர்தல் அதிகாரிகள் பெல் என்ஜினியர்கள் வரவழைத்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்த கோலாறை சரி செய்தனர். இதையடுத்து வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த திருப்பூர் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஏ.சரவணக்குமார் நீண்ட நேரமாக காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
இதே போல் தாளவாடி தொட்டகாசனூரிலும் வாக்குப்பதிவு எந்திர கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. இந்த வாக்குச்சாவடியில் ஒன்றரை மணி நேரமாக காத்திருத்து தனது முதல் வாக்கை இளம்பெண் சாந்தா பதிவு செய்தார். தேர்தலை ஒட்டி சத்தியமங்கலம் தினசரிமார்க்கெட், பூ மாரக்கெட் மூடப்பட்டது.