கரோனா வைரஸ் பரவல் காணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசு நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட வடக்கு மண்டலங்களுக்குள் மக்கள் சென்று வர இ-பாஸ் தேவை இல்லை என அறிவித்துள்ளதால், நீலகிரியைச் சுற்றியுள்ள மண்டலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் நீலகிரியில் குவிந்து வருகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலாப் பகுதியில் வசிக்கும் மக்கள், "நீலகிரி பர்லியார் சோதனைச் சாவடி வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஆனால், போலியான காரணங்களைக்கூறி பலரும் சுற்றுலா வந்து திரும்பிச் செல்கின்றனர். அவ்வாறு வரும் அவர்கள் கூட்டம் கூட்டமாக நீர் வீழ்ச்சியில் செல்ஃபி எடுத்து வருகின்றனர். எனவே, சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.