மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டி இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கோடை சீசன் மட்டுமின்றி, நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல வெளிமாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், தேயிலை பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, முதுமலை புலிகள் சரணாலயம் உள்பட ஏராளமான சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம்.
இதில் குறிப்பாக தென்னிந்தியாவின் உயரமான சிகரம் என்று அழைக்கப்படும் தொட்டபெட்டா காட்சிமுனையை காண தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள்வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை - கோத்தகிரி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் வாகனங்களில் சென்று பார்வையிட்டு வந்தனர். கடல் மட்டத்திலிருந்து 2637 மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டபெட்டா சிகரத்தை கண்டுரசித்து செல்கின்றனர்.
வனத்துறை கட்டுபாட்டில் உள்ள இந்தசாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கபடாமல் இருந்ததையடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைவிடுக்கபட்டது.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு ரூ.1.09 கோடி நிதி ஒதுக்கியது. அந்த நிதியில் சாலை தற்போது சீரமைக்கபட்டுள்ளதுடன், சாலையின் இருபுறமும் கான்கீரிட் போடப்பட்டுள்ளன. ஆனாலும், 15 நாட்கள் மேலாகி இந்த சாலை திறக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த சுற்றுலாப் பயணிகள் 15 நாட்கள் ஆகியும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்காக அந்த சாலை திறக்கப்படாமல் உள்ளது. எனவே அதை உடனடியாக திறக்கவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.