நீலகிரி: தமிழகத்தில் மலை சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமான ஒன்று நீலகி. இங்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு தமிழக அரசு சார்பில் தாவரவியல் பூங்கா, காட்டேரி பூங்கா, ரோஜா பூங்கா என ஏராளமான பூங்காக்கள் அமைக்கப்பட்டு, மக்களை கவரும் வண்ணம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்தே காணப்படும். தற்போது தொடர்ந்து நான்கு நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக அதிகரித்து உள்ளது. சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி, சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பார்க், கோத்தகிரி நேரு பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம், ரோஜா பூங்கா உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகளை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும் அங்குள்ள புல்வெளியில் அமர்ந்து குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்தனர்.
நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 2 நாட்களில் மட்டும், சுமார் 49 ஆயிரத்து13 சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து உள்ளனர். ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் கடந்த இரு நாளில், 29 ஆயிரத்து 611 பேர் வந்து உள்ளனர். கடந்த ஜன.14 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 15 ஆயிரத்து 977 பேர் வந்திருந்தனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு உள்ளதால் இனிவரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருப்பூரில் இருந்து வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் கூறுகையில் “நீலகிரி மாவட்டத்தில் தற்போது இதமான காலநிலை ஏற்படுவதால், இந்த காலநிலை புதுவித அனுபவமாக உள்ளது.
இங்கு முதுமலை புலிகள் காப்பகம், யானை சவாரி மற்றும் குன்னூர் படகு இல்லத்தில் படகு சவாரி செய்தது, நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலில் பயணித்தது என எல்லாமே மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குன்னூர் பகுதியில் உலாவும் யானைகள்..பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை