நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான புலிகள் உள்ளன.
இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட மசினகுடி அருகே சிங்காரா வனப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதியன்று வனத் துறை ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, புலி ஒன்று இறந்துகிடப்பதைக் கண்டு வனத் துறை அலுவலர்களுக்கும், கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் கொடுத்தனர். பரிதாபமாக இறந்துகிடந்த புலியை உடற்கூராய்வு செய்தனர். சோதனைக்குப் பின்னர் மருத்துவர்கள் புலி நஞ்சுண்டு இறந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து நஞ்சு வைத்துக் கொன்ற நபர்களைப் பிடிக்க வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் புலிக்கு நஞ்சு வைத்து கொன்ற வழக்கில் அகமது, கரியன் என்ற இருவரை வனத் துறையினர் கைதுசெய்து, மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சதாம், செளகத் ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.