நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் சீசனை ரசிக்க அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை விழாவின் கடைசி நிகழ்ச்சியான 61ஆவது பழக் கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்றது.
சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்கா நுழைவு வாயிலில் 12 அடி உயரத்தில் ஆரஞ்சு, திராட்டை, அன்னாச்சி போன்ற பழங்களை கொண்டு வரவேற்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது.
12 மாவட்டங்களில் விளையும் பழங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான பழங்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டுக் களித்தனர். இந்தாண்டு தோட்டக்கலைத் துறையின் புதிய முயற்சியாக பழங்களை சேதப்படுத்தாமல் வண்ணத்துப்பூச்சி, மாட்டு வண்டியுடன் கூடிய விவசாய தம்பதி, மயில் ஆகிய உருவங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
கண்காட்சியின் கடைசிநாளான நேற்று (மே 27) சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். மாலையில் போட்டியாளர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.