நீலகிரி மாவட்டம், நெடுகல்கம்பை பழங்குடியின கிராமத்திற்கு 2016ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் கும்பல் வந்து பதுங்கியது. அதைத் தொடர்ந்து அங்குள்ள பழங்குடியின மக்களை மூளைசலவை செய்து, அரசுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் அக்கும்பலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த கொலக்கொம்பை காவல் துறையினர் சந்தேகத்திற்கிடமாக 7 பேரைத் தேடி வந்தனர்.
இதனிடையே நெடுகல்கம்பை வந்து சென்றதாக தொடரப்பட்ட வழக்கில், டேனிஸ் என்கிற கிருஷ்ணன் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை கொலக்கொம்பை காவல் துறையினர், ஊட்டி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து ஆஜர்படுத்தினர்.
அந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அதே வழக்கில் கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டம், மேல்கங்கா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீமதி என்கிற ஷோபா (33) என்பவர், மார்ச் மாதம் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் நெடுகல்கம்பைக்கு 2016ஆம் ஆண்டு வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து அவரை கொலக்கொம்பை காவல் துறையினர் கைப்பற்றி, கோவை தனிச்சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் ஆகஸ்ட் 5ஆம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ஷோபாவை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நீதிபதி ஒரு நாள் மட்டுமே விசாரணை மேற்கொள்ள அனுமதி அளித்தார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையும் படிங்க: மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு!