நீலகிரி: சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக மலை ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மலை மாவட்டமான நீலகிரியிலுள்ள ஏராளமான சுற்றுலாத் தலங்களை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நூற்றாண்டுகளுக்கு மேலாக மேட்டுபாளையம்-குன்னூர்-உதகை இடையே இந்த மலை ரயில் இயக்கபட்டு வருகிறது. நீராவி என்ஜின் மூலம் இயக்கபடும் இந்த மலை ரயில் சேவை தொடங்கி 112ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
அதனை கொண்டாடும் விதமாக உதகை ரயில் நிலையத்தில். இன்று 112ஆவது மலை ரயில் தினம் கொண்டாடபட்டது. கரோனா ஊரடங்கால் ரயில் சேவை நிறுத்தி வைக்கபட்டிருந்தாலும் மலை ரயில் தினத்தையொட்டி, நீராவி என்ஜின் கொண்ட ஒரு பெட்டியுடன் மலை ரயில் உதகைக்கு இயக்கபட்டது. உதகை ரயில் நிலையத்திற்கு வந்த மலை ரயிலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா வரவேற்றதுடன், அதன் ஓட்டுநர்களுக்கும் மலர் கொடுத்து வரவேற்பளித்தார்.
பின்னர் கேக் வெட்டபட்டு அனைவருக்கும் வழங்கபட்டது. அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இன்னசென்ட் திவ்யா, “யுனஸ்கோ அந்தஸ்து கொண்ட உதகை மலை ரயில் நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. இது போன்ற பாரம்பரிய சின்னம் இருப்பது மாவட்டத்திற்கு பெருமை. கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கபட்டுள்ள மலை ரயில் சேவையை மீண்டும் தொடங்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.