நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகம் 681 சதுர கிலோ மீட்டர் வனப் பகுதியைக் கொண்டுள்ளது.
இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் காணப்படுகின்றன. இங்கு வன விலங்குகளைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
புலிகள் காப்பகத்தின் வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் சென்றுவர, யானை சவாரி மற்றும் வாகன சவாரி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் 28க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கரோனா காரணமாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பக சரணாலயம் 120 நாட்கள் பின்பு நேற்று முன்தினம் (செப். 3) சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது. ஆறாம் தேதி முதல் யானை சவாரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்ததைவிட சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் யானை சவாரியில் பயணம் செய்ய விருப்பம் தெரிவித்ததால், முன்னதாகவே இன்று (செப். 5) காலை முதல் யானை சவாரி சுற்றுலா பயணிகளுக்காக தொடங்கப்பட்டது.
சுமார் ஒன்றரை வருடத்திற்குப் பிறகு யானை சவாரி தொடங்கப்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் யானை மீது அமர்ந்து வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளைக் கண்டு ரசித்தனர்.