நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள செலுக்காடி பகுதியில் நேற்று (ஜூலை 16) நள்ளிரவு சுமார் 28 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மேய்ச்சலுக்காக (உணவு உண்பதற்காக) வந்தது. கடந்த இரண்டு தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் புதர் மற்றும் வயல் பகுதிகளில் நீர் தேங்கி, சகதிகள் அதிகமாக இருந்துள்ளன.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காபித் தோட்டத்தில் மேய்ச்சலுக்காக வந்த யானையின் பின்னங்கால் இரண்டும் சுமார் 5 அடி சேற்றில் சிக்கிக் கொண்டது. நீண்ட நேரம் போராடியும் யானையால் எழ முடியாத நிலையில், அதே பகுதியில் துடிதுடித்து இறந்துள்ளது.
இன்று (ஜூலை 17) நண்பகல் காபி தோட்டத்தைப் பார்வையிடச் சென்ற தொழிலாளர்கள் யானையைப் பார்த்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானையை ஆய்வு செய்தனர்.
உணவு தேடி வந்த யானை சேற்றில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: காடுகளின் கவசம் யானைகள்!