நீலகிரி மாவட்டத்தில் இருளர், தோடர், கோத்தர், பனியர், காட்டுநாயக்கர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருகின்றனர். வனப்பகுதியிலும் வனப்பகுதியையொட்டிள்ள கிராமங்களிலும் வசித்துவரும் இவர்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்துவருகின்றனர். இவர்கள் தங்கள் தேவைகளைக் கோரி மனுக்கள் வழங்க வேண்டுமென்றாலும் வெகு தொலைவிலிருந்து உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத்தான் வர வேண்டும்.
இதனையறிந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்களின் கிராமத்திற்கேச் சென்று அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்து அதைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார். இதன்படி இன்று வன விலங்குகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதி வழியாக 12 கி.மீ. தூரம் நடந்துசென்றே ஆனைகட்டியைச் சுற்றியுள்ள பழங்குடியின மக்களைச் சந்தித்துள்ளார். அப்போது குடிநீர் குழாய் சீரமைப்பு, 25 பசுமை குடில் வீடுகள் திட்டம், பள்ளி கட்டடம் சீரமைப்பு, பேருந்து வசதி உள்பட பல திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்தார். மாவட்ட ஆட்சியரே தங்களது கிராமத்திற்கு நடந்துவந்து குறைகளைக் கேட்டறிந்ததற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்ததோடு திட்டங்களை விரைவாக நிறைவேற்றித் தர கோரிக்கைவிடுத்தனர்.
இதையும் படியுங்க:
காட்டுப்பன்றி என நினைத்து காதலர்களை சுட்ட விவசாயி - காதலன் பலி!