நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதியில் கடந்த 23ஆம் தேதி பெய்த கனமழையினால், கோத்தகிரி மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் எட்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு சாலையில் ஏற்பட்ட மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக நீலகிரி சென்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொடர் மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்ட சீரமைப்பு பணியை ஆய்வு செய்தார். பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தபின் சென்னை திரும்பும் வழியில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 13வது கொண்டை ஊசி பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.
முன்னதாக 9வது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் தென்காசி கடையம் பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளான பகுதியையும் அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, "நீலகிரியில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், அதன் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. சாலை சீரமைப்பிற்காக மத்திய அரசிடம் ரூபாய் 18 கோடி நிதி வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகத்தில் தனிக் குழு அமைக்கப்பட்டு மண்சரிவுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி: தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.18) விடுமுறை..அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு!