கொடைக்கானல் நகர் ஏரிச்சாலை பகுதிகளில் மாடுகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால் இந்தப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. சில சமயங்களில் சாலையின் நடுவிலும் மாடுகள் நின்று கொள்வதால் மிகுந்த இடையூறாக இருக்கிறது என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
வாகனங்களில் அதிக சத்தமாக ஒலி எழுப்பினாலும்கூட மாடுகள் சாலையை விட்டு நகர மறுக்கின்றன. கூட்டமாக சுற்றித் திரியும் மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும்போதும், திடீரென சாலையின் குறுக்கே செல்லும்போதும் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள்மீது மோதி அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகின்றன.
சில நேரங்களில், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், வாகனங்களையும் மாடுகள் முட்டிவிடும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இதில், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே இதுகுறித்து மாடு வளர்போர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாடுகள் சாலையில் திரிவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: குண்டும் குழியுமான குன்றத்தூர் சாலை.. விபத்து ஏற்படும் அபாயம்!