நீலகிரி: நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இங்கு வன விலங்குகளான காட்டெருமைகள், புலி, சிறுத்தை, கரடி என பல்வேறு வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும், அடிக்கடி பொருள்சேதங்களும், உயிர்சேதங்களும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், நேற்று (ஜன.6) பந்தலூர் அருகே, மேங்கோரேஞ்ச் எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரது குழந்தை (3) அங்கன்வாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, காட்டுப் பகுதியிலிருந்து வெளியே வந்த சிறுத்தை, குழந்தையைத் தாக்கி தேயிலைத் தோட்டத்திற்குள் தூக்கிச் சென்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு சிறுத்தையை விரட்டி சிறுமியை மீட்டுள்ளனர். பின்னர், பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அக்குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்ததால், நேற்று மாலை முதல் கூடலூர் பகுதியில் சாலை மறியல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றது. ஏற்கனவே, சிறுத்தையைப் பிடிக்க பத்து இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு, ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டது.
மேலும், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க, முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறை கால்நடை மருத்துவர் இருவர் வரவழைக்கப்பட்டு, துப்பாக்கிகள் மூலம் மயக்க ஊசிகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், பொதுமக்களின் போராட்டத்தால் இன்று (ஜன.7) காலை முதுமலையிலிருந்து கும்கி யானை பொம்மன் வரவழைக்கப்பட்டு, சிறுத்தையைக் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், முதுமலையிலிருந்து மீண்டும் ஒரு கும்கி யானை வரவழைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. தொடர் சிறுத்தை தாக்குதலால் கூடலூர் பகுதி முழுவதும் ஆறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடலூர் முழுவதும் பதட்ட நிலை காணப்படுகிறது.
இதேபோல், ஏற்கனவே கீர்த்திகா என்ற 4 வயது சிறுமி கடந்த 4ஆம் தேதி சிறுத்தை தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார். அதுமட்டுமின்றி, இதே பகுதியில் 3 பெண்களையும் சிறுத்தை தாக்கியது. அதில், ஒரு பெண் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “நான் கோட்-சூட்டில் வந்தது எதற்காக தெரியுமா?” - முதலமைச்சர் சுவாரஸ்ய பேச்சு