தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு எமரால்டு பகுதியில் இருந்து குடிநீர் கொண்டுவரும் திட்டம் 2014ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் 100 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு பெரிய அளவில் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்றுவந்தது.
குன்னூர் பகுதியில் தற்போது 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த எமரால்டு கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் குன்னூர் பகுதியில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது குன்னூரில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், பொதுமக்களின் குடியிருப்புகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவருகிறது.
மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள், ஹோட்டல்களில் தண்ணீர் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருவதால், பொதுமக்கள் வேறு வழியின்றி குடிநீரை விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எமரால்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் எமரால்டு முதல் கிரேஸில் வரை உள்ள குழாய்கள் சேமடைந்துள்ளதா என முதற்கட்ட சோதனை நடைபெற்றுவருகிறது. இதனால் இனி வருங்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என குன்னூர் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:தென்காசியில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு