நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் கூடிய 5 காட்டு யானைகள் பர்லியார் பகுதியில் முகாமிட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் எச்சரிக்கையுடன் இருக்க குன்னூர் வனச்சரகர் ரவீந்தரநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் பகுதியில் வறட்சி நிலவுவதால், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் குடிநீருக்காக குன்னூர் அருகே உள்ள ரன்னிமேடு ரயில் நிலையம் மற்றும் நஞ்சப்பசத்திரம் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக உலா வந்த காட்டுயானைகள் நீலகிரியின் முகப்பு வாயிலான பர்லியார் பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் குடியிருப்புகளுக்கு அருகில் வந்து விடாமல் கண்காணிக்கும் பணியில் 5 வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவை அவ்வப்போது சாலைகளைக் கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இந்த சாலைகளில் பயணிக்கும் சுற்றுலா வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தாமலும், யானைகளைக் கண்டு செல்ஃபி எடுக்காமலும் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 10 IAS officers Transfer: மகளிர் உரிமத்தொகை திட்டத்தை நிறைவேற்ற இளம்பகவத் நியமனம்
இதே போல், கூடலூர் நகராட்சி, பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி பகுதியில் வசித்து வருபவர், லலிதா தேவி. இவர் வழக்கம் போல் நேற்று வேலைக்குச் சென்று இருக்கிறார். அப்போது மாலை நேரத்தில் யானைக் கூட்டம் சேரம்பாடி பகுதியில் உலா வந்தது. உலா வந்த யானைக் கூட்டம், லலிதா தேவி வீட்டை முற்றுகையிட்டு வீட்டின் கதவை உடைத்தது. பின் தும்பிக்கையை நீட்டி வீட்டின் பொருட்கள் அனைத்தையும் தூக்கி வீசியது. பின்பு கிடைத்த தானியப்பொருட்களை சாப்பிட்டது.
இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து யானையை அப்பகுதியில் இருந்து விரட்டினர். இதைப்போல் தகவல் அறிந்த அப்பகுதி திமுக கவுன்சிலர் கோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லலிதா தேவியைப் பார்த்து, ஆறுதல் கூறி, அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தார். ஆதரவற்ற லலிதா தேவிக்கு அரசு உதவிட வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அடுத்த பிரதமரை உருவாக்கும் வியூகத்தை ஸ்டாலின் வகுத்துள்ளார் - திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு