நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜூலை 22) காலை முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. எமரால்டு, இத்தலாறு, நஞ்சநாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் பாலாடா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
காய்கறிகள் நாசம்
கரைபுரண்டு ஓடிய வெள்ளம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மலை காய்கறிகள் நீரில் மூழ்கி நாசமாகின. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 25 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 15.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பந்தலூரில் 15 செ.மீ, நடுவட்டத்தில் 13.7 செ.மீ, அப்பர் பவானியில் 13.2 செ.மீ, கிளண்மார்கனில் 11.6 செ.மீ, தேவாலாவில் 10.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பேரிடர் மீட்பு படை வருகை
மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 2 குழுக்கள் இன்று (ஜூலை 23) மதியம் நீலகிரியை வந்தடையவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
அதில், ஒரு குழு உதகைக்கும், மற்றொரு குழு கூடலூருக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார். முதற்கட்டமாக எமரால்டு, கூடலூர் பகுதியில் 60 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மழை நீர் தேக்கம்: நீச்சலடித்து கம்யூனிஸ்ட் போராட்டம்