குன்னூர் நகராட்சியில் வாகன நிறுத்துமிடப் பிரச்னை அதிகரித்து வந்ததால், வாகன நெரிசலைத் தவிர்க்க பேருந்து நிலையம் அருகே ஓடையின் மேல் கான்கிரீட் தளம் போடப்பட்டு, வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டது. இது தனியாருக்கு ஒப்பந்தத்திற்கு விடப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஒப்பந்தம் எடுத்தவர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 19 லட்சம் ரூபாயை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததால், கடந்த வாரம் இந்த வாகன நிறுத்தும் இடத்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால், வாகனங்களை நிறுத்த முடியாமல் போக்குவரத்து நெரிசல் அதிகமானது.
இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வாகனம் நிறுத்தும் இடத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்ற நகராட்சி நிர்வாகம், சில நபர்களை பணியமர்த்தி வாகனம் நிறுத்தும் இடத்தை திறந்தது.
இந்தச்சூழலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வாகன நிறுத்தும் இடத்திற்குள் நகராட்சியால் சீல் வைக்கப்பட்டிருந்த கடையின் பூட்டை, அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர். வழக்கம் போல நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் சீல் உடைக்கப்பட்டிருப்பது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்குத் தகவலளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த அதிகாரிகள் சீல் வைத்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை உறுதி செய்த பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டதற்கு லவ் ஜிகாத் காரணமில்லை: ஜவாஹிருல்லா