நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61ஆவது பழக்கண்காட்சி மே 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், தோட்டக்கலை துறையின் சார்பில், பழ வண்டி, பழ மேடை, மயில், பட்டாம்பூச்சி போன்றவை பழங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதில் வாழைப் பழங்கள், மாம்பழங்கள், பலா, நீலகிரியின் பேரி, பிளம்ஸ், பீச் உள்ளிட்ட ஏராளமான பழங்கள் இடம் பெற்றிருந்தன. இதுமட்டுமின்றி டிராகன் பழம், பப்ளிமாஸ், நாவல் உள்ளிட்ட பல்வேறு வகை பழங்கள் 1.5 டன் அளவிற்கு பயன்படுத்தப்பட்டிருந்தது.
ஆண்டுதோறும் கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட பழங்கள் அழிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் இவற்றை மீண்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் அந்தப் பழங்கள் இரண்டு நாட்கள் மட்டும் காட்சிப்படுத்தி உடனடியாக பழவியல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்கு பழங்களை ஜெல்லி, ஜாம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்க தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.