நீலகிரி: கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் உள்ள ஈளாடா பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், ஈளாடா பகுதியில் தனது தாயுடன் வசித்து வருகிறார். சிவகுமாருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் அன்னூரில் வசித்து வருகின்றனர். சிவக்குமார் தனது தாயுடன் ஈளாடா பகுதியில் வசித்து கொண்டு கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (செப். 18) அன்று வழக்கம்போல் வேலைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பிய சிவக்குமார், இரவு வீட்டிற்கு வரவவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரின் தாய் அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளார். பின்னர், சிவக்குமார் கிடைக்காததால் அன்னூரில் உள்ள அவரது மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சிவக்குமாரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரனை நடத்திய நிலையில் ஈளாடா பகுதியில் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்த சிவக்குமாரின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சிவக்குமார் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவர், தன்னை விட்டு பிரிந்து வாழும் காரைக்குடியில் உள்ள மனைவி வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது மனைவிக்கும் விஷ்ணுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது விஷ்ணு மது போதையில் "நான் இப்போதான் கோத்தகிரியில் ஒரு கொலை செய்து விட்டு வந்துள்ளேன், அதேபோல் உன்னையும் கொன்று விடுவேன்" என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது. பின்பு அவரது மனைவி விஷ்ணுவிடம் மீண்டும் கேட்ட போது ஈளாடாவில் உள்ள சிவக்குமார் என்பவரை பொன்னூர் பகுதியில் உள்ள சாலையோர மலைப் பகுதியில் புதைத்து வந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
உடனே சுதாரித்த விஷ்ணுவின் மனைவி, சிவகுமாரின் மகளுக்கு போன் செய்து சம்பவம் குறித்து கூறியுள்ளார். உடனே சம்பவம் தொடர்பாக சோலுர்மட்டம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் பொன்னூர் பகுதியில் உள்ள சாலையோரம் வனப்பகுதியில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது சிவகுமார் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தடயவியல் நிபுணர்கள், வருவாய்த் துறையினர், மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் யாரேனும் தொடர்பு உள்ளனரா என்ற கோணத்திலும், எதற்காக இந்த கொலை நடந்தது என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள விஷ்ணுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.9ஆயிரம் கோடி விவகாரம்: வங்கி மீது புகார் கொடுத்த கார் ஓட்டுநர்!