தஞ்சாவூர்: பொங்கல் பண்டிகை உழவர்களின் திருநாளாக கொண்டாடப்படுகிறது. பண்டிகை அன்று அதிகாலையில் வீடுகளின் முன்பு மண் அடுப்பு செய்து, புத்தம் புதிய மண்பானை வைத்து, பொங்கலிட்டு அதனை சூரியனுக்கு படைப்பது வழக்கம். ஆனால், தற்போதைய நவீன காலகட்டத்தில் அனைவரும் கேஸ் அடுப்பில் பொங்கல் வைக்கத் தொடங்கிவிட்டனர்.
இருப்பினும் ஒரு சில கிராமங்களில் இன்றளவும் பொங்கல் பண்டிகையில், தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், பானை வைத்து அடுப்பில் பொங்கலிட்டு மகிழ்ந்து வருகின்றனர். அப்படி பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாக, கொட்டாங்குச்சி கொண்டு செய்யப்படும் அகப்பை உள்ளது.
இந்நிலையில் தஞ்சையை அடுத்த வேங்குராயன்குடிகாடு கிராமத்தில் பாரம்பரியமாக பொங்கல் தினத்தன்று அகப்பையை பயன்படுத்தி வருகின்றனர், அக்கிராம மக்கள். இதற்காக அந்த கிராமத்தில் உள்ள தச்சு தொழிலாளர்கள் அகப்பையை தயாரித்து பொங்கல் தினத்தன்று, காலையில் ஊர் மக்களிடம் வீட்டுக்கு வீடு சென்று வழங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த அகப்பைக்கு அவர்கள் பணம் ஏதும் பெறுவதில்லை, அதற்கு மாறாக நெல், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். இந்தப் பழக்கம் தொடர்ந்து பாரம்பரியமாக நடைபெறுகிறது. இது குறித்து அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தச்சு தொழிலாளர்கள் கூறும் போது, “பொங்கல் பண்டிகைக்கு முன்பே அகப்பை தயாரிக்கப்பட்டு, கிராமங்களில் உள்ள வீடுகளில் பொங்கல் தினத்தன்று பணம் ஏதும் பெறாமல் அகப்பை வழங்குவோம்.
இது பாரம்பரியமாக தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் தினத்தில் மண் பானையில் பொங்கல் வைக்கும் போது, அதில் உள்ள அரிசியை கிளறுவதற்கு 'அகப்பையை’ நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த அகப்பை தேங்காய் கொட்டாங்குச்சியினை சுத்தம் செய்து, அதில் மூங்கிலை சீவி இரண்டரை அடி நீளத்தில் கைப்பிடியாக்கி பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் நாகரிகத்தின் வெளிப்பாடாக சில்வர் பித்தளை கரண்டிகளின் வரவால் அகப்பை காணாமல் போனது' எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பனை ஓலை பொங்கலுக்கு தயாராகும் தூத்துக்குடியும் பனைத்தொழிலாளர்களின் நிலையும்!