தஞ்சாவூர்: செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சர்மிளா (வயது 22). இவர் சென்னையில் உள்ள தனியார் கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்து உள்ளார். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக செங்கிப்பட்டி அருகே உள்ள தச்சன்குறிச்சி உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்வுக்காக சர்மிளா வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, விடுப்பு எடுத்து தச்சங்குறிச்சியில் உள்ள தனது தாய் மாமா பிரபு வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், தச்சங்குறிச்சி அருகே உள்ள நாட்டாணியில் வெள்ளிக்கிழமை (நவ.18) நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பிரபு உள்ளிட்டோர் சென்று விட்டனர். இதனால், தன்னையும் அழைத்துச் செல்லுமாறு பிரபுவிடம் ஷர்மிளா கைப்பேசி மூலம் கூறியுள்ளார்.
தன்னால் மீண்டும் வந்து அழைத்துச் செல்ல முடியாத நிலையில், பிரபு தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் கருப்புசாமியை (வயது 30) அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. சர்மிளாவை கருப்புசாமி மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கிழமை மாலை அழைத்து வந்துள்ளார். இதனிடையே, சர்மிளாவின் கைப்பேசிக்கு பிரபு தொடர்பு கொண்டபோது, இருவரும் நாட்டாணி அருகே வந்து கொண்டிருப்பதாக கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், வெகு நேரமாகியும் இருவரும் நாட்டாணிக்கு வராததால், சந்தேகமடைந்த பிரபு கைப்பேசி மூலம் சர்மிளாவுக்கும், கருப்புசாமிக்கும் தொடர்பு கொள்ள முயறதாக சொல்லப்படுகிறது. ஆனால், இருவரது கைப்பேசிகளும் அணைக்கப்பட்டு இருந்ததாகவும், அவர்களை பிரபு உள்ளிட்டோர் தேட தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம் நாட்டாணி அருகே உள்ள முதலை முத்துவாரி நீர்த்தேக்கம் பகுதியில் சர்மிளா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்ததாக சொல்லப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபு உடனடியாக தஞ்சை வல்லம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்து உள்ளார்.
தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கருப்பசாமி தான் ஷர்மிளாவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்ததாக கூறினர். இதுகுறித்து, வல்லம் காவல் நிலையத்தினர் கருப்புசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் அருகே உள்ளவர் என்ற நம்பிக்கையில் அனுப்பி வைத்த நிலையில் சர்மிளா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் வல்லம் காவல் துறையினர் விரிவான விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மென்பொருள் நிறுவனத்தின் தரவுகள் திருட்டு.. அதே நிறுவன ஊழியர்கள் 5 பேர் கைது - என்ன நடந்தது?