தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும். வேறு கோயில்களில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா வாராஹிக்கு நடைபெறுவது இல்லை. அதனால் இவ்விழா தஞ்சையில் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி 21ம் ஆண்டு பெருவிழா தஞ்சை பெரியகோயிலில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் நேற்று (ஜூன் 27) ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவில் காய்கறி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
அதனை தொடர்ந்து அந்நாளில் அம்மன் திருவீதி உலா மற்றும் பூச்சொரிதலும் நடைபெற்றது. மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நந்தி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ மஹா வாராஹி அம்மன்
- 18-ஆம் தேதியான தொடக்க நாளில் இனிப்பு வகைகளால் அலங்காரம்
- இரண்டாம் நாள் - மஞ்சள் அலங்காரம்
- மூன்றாம் நாள் - குங்கும அலங்காரம்
- நான்காம் நாள் - சந்தன காப்பு அலங்காரம்
- ஐந்தாம் நாள் - தேங்காய் பூ அலங்காரம்
- ஆறாம் நாள் - மாதுளை முத்துக்களால் அலங்காரம்
- ஏழாவது நாள் - நவதானியத்தால் சிறப்பு அலங்காரம்
- எட்டாவது நாள் - வெண்ணெய் அலங்காரம்
- ஒன்பதாவது நாள் - கனி வகை அலங்காரம்
அதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 27) பத்தாம் நாளாக காய்கறி அலங்காரம் செய்யப்பட்டது. கேரட், முருங்கைகாய், உருளைக்கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய் , சோளம், மிளகாய், பாகற்காய், முள்ளங்கி, புடலங்காய், கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, பீட்ருட், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைப்பூ, காலிபிளவர் உள்ளிட்டவைகளால் வாராஹி அம்மன் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது.
மேலும், மத்திய அரசின் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நந்தி மண்டபத்தில் கலை நிகழ்ச்சியாக கலைமாமணி லலிதா மற்றும் நந்தினி குழுவினரின் வயலின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டும், இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க:ஆகமம் கற்றுத் தேர்ந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம்: உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு!