தஞ்சாவூர்: கீழ அலங்கம் பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே அருகில் உள்ள மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (வயது 68) என்ற முதியவர் மற்றும் விவேக் (வயது36) என்ற இளைஞர் ஆகிய இருவரும் மீன் வியாபாரம் செய்து வருபவர்கள்.
கள்ள சந்தையில் நேற்று பகல் (மே.21) மது வாங்கி அருந்தியதாக கூறப்படுகிறது. அந்த மது அருந்தியதால் இருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்தவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியில் குப்புசாமி என்பவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் விவேக்கும் என 2 பேரும் உயிரிழந்தனர். இதனால் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தஞ்சை கிழக்கு காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் மாதிரிகளை காவல்துறையினர் சேகரித்து தடய ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தற்போது வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் டாஸ்மாக் அந்த மதுபான கடையை பூட்டி சீல் வைத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியது, “டாஸ்மாக் பாரில் 2 பேர் மது அருந்தியதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இறந்தவர்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, மெத்தில் ஆல்கஹால் இல்லை என்பதும், சயனைடு விஷம் அருந்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது என்றார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்தும் உடனிருந்தார். இதில் சயனைடு விஷம் அருந்தியதால் ஏற்பட்ட தற்கொலையா, அல்லது கொலையா என தீவிர விசாரணையை தனிப்படையை அமைத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக் பாரின் உரிமையாளர் பழனிவேல் மற்றும் ஊழியர் காமராஜ் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முருகானந்தம் விற்பனையாளர்கள் திருநாவுக்கரசு, சத்தியசீலன், பாலு ஆகிய 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்களது கண்டணத்தை தெரிவித்து வருகின்றனர். இறந்தவர்களின் உறவினர்கள் கூறும் போது, “சயனைடு விஷம் கலந்து மது குடித்துள்ளனர் என்பதில் உண்மையில்லை, உண்மையான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்” என்று கூறினர்.