தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், ”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி பேசியபோது அமைதியாக இருந்தவர்கள், பின்னர் கூட்டணி பற்றி பேசிவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.
அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களும் டெல்லியில் யாரையோ சந்திக்க காத்திருந்து சந்திக்க முடியாமல் திரும்பி உள்ளனர். அந்த ஏமாற்றம்தான் கூட்டணியில் இருந்து விலகக் காரணமாக இருக்கும். அதைத் தாண்டி வேறு காரணங்களும் இருக்கலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், “திமுக மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியில் உள்ளனர். 2019இல் கூட்டணி பலத்தை வைத்து வெற்றி பெற்றார்கள். இப்போது திமுக, காங்கிரஸ் கூட்டணி இருந்தும், தமிழ்நாட்டிற்கு என்ன கிடைத்துவிடும்? கர்நாடக அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீரைப் பெற்றுத் தர முடியவில்லை. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணியைக் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது.
ஆகவே, தமிழ்நாட்டின் நலன் கருதி மக்கள் வாக்களிப்பார்கள். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதாக வாட்ஸ் அப்பில் செய்தி வருகிறது. இந்த ஆட்சி காமெடி ஆட்சியாகவும், மக்கள் விரோத ஆட்சியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேசியக் கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைப்பது ஒருபுறம் இருந்தாலும், மாநிலக் கட்சிகள்தான் அந்த மாநிலத்தின் உரிமைகளுக்காக தைரியமாக போராட முடியும் என்பதுதான் உண்மை.
ஆகவே, மாநிலக் கட்சிகளுக்கு சட்டமன்றத் தேர்தல்போல பொதுத் தேர்தலிலும் ஆதரவளித்தால்தான் உரிமைகளைப் போராடி பெற முடியும். சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுத்துதான் உள் இடஒதுக்கீடு வழங்க முடியும். அதுதான் சரியான நடைமுறையாக இருக்கும். விளம்பர வெளிச்சத்தில்தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைத் தவிர உண்மையான சாதனை இரண்டு ஆண்டுகளில் எதுவும் இல்லை என்பதுதான் எதார்த்தம்.
திமுக திருந்தாது என்பதை மீண்டும் மீண்டும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். கர்நாடக அரசிடமிருந்து தண்ணீரைப் பெற்றுத் தர முடியாமல் தமிழ்நாடு முதலமைச்சர் தோல்வி அடைந்து விட்டார். அதை வருங்காலத்தில் போராடித்தான் பெற வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடினால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூரியனார் கோயில் ஆதீனத்திற்கு திருவாவடுதுறை ஆதீனம் நோட்டீஸ் - எதற்காக தெரியுமா?