தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 21 நாட்களில் 65 லட்சம் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது குறுவை சாகுபடியில் இதுவரை இல்லாத வரலாற்று நிகழ்வு ஆகும் என்றார்.
மேலும் அவர், நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம், இருந்தாலும் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லின் ஈரப்பதம் கூடுதலாக இருந்தாலும் கொள்முதல் செய்து வருகிறோம், இதுவரை டெல்டா மாவட்டங்களில் 90 சதவீதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, மீதி 10 சதவீதம் மட்டுமே உள்ளது. இனி வரும் காலங்களில் விவசாயிகள் எவ்வளவு நெல் கொண்டு வந்தாலும் அதை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது.
திமுக ஆட்சியில் இருந்தபோது 1,100 மட்டுமே குவிண்டாலுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 1,950 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார். விவசாயிகளின் வாழ்க்கை சேறு, சகதி, வறட்சி என அமைந்துள்ளது, நான்கு சுவருக்குள் அமர்ந்து கொண்டு, ட்விட்டரில் விவசாயிகளின் வாழ்க்கை சரியாக அமைக்கப்படவில்லை என கூறக்கூடாது. விவசாயிகளின் நிலைமை, விவசாயிகளாக இருக்கக்கூடிய எங்களுக்கு தெரியும் என்றார்.