தஞ்சாவூர்: தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுவதில் மேட்டூர் அணை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீரை நம்பிதான், டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது. மேலும் குடிநீர் தேவையும் மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. சில இடங்களில் பம்ப் செட் மூலம் சாகுபடி செய்தாலும் மேட்டூர் அணையை நம்பி தான் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி திறந்து விடப்பட்டது.
அந்த சமயத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்தது. குறிப்பிட்ட தேதியில் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை மிஞ்சியும் சாகுபடி செய்யப்பட்டன. விவசாயிகள் குறுவையில் நல்ல விளைச்சல் பெறலாம் என்ற பெரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், சில நாட்களில் நிலைமை மாறியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைய தொடங்கியது.
தென்மேற்கு பருவமழையும் கைக்கொடுக்கவில்லை. மேலும், உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புப்படி, தமிழகத்திற்கு மாதம் வாரியாக வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காமல் வஞ்சித்தது. இக்காரணங்களினால், குறுவை பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர். சுமார் 3 லட்சம் ஏக்கர் அளவுக்கு தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்ந்து கருகின. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்கள். தொடர் போராட்டங்கள் நடத்தியும் கர்நாடகா அரசு தண்ணீர் தரவில்லை.
தமிழக அரசு பலமுறை உரிய அழுத்தம் கொடுத்தும் தண்ணீர் திறந்துவிட மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்டாவில் குறுவை பயிர்கள் காவிரி நீரின்றி காய்ந்து சேதம் அடைந்தன. எஞ்சிய பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விடவில்லை. மேலும், சம்பா சாகுபடியும் கேள்வி குறியாக தான் உள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா மற்றும் மத்திய அரசை அரசை கண்டித்து காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று (அக்.11) தேதி தஞ்சை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
மேலும், தஞ்சை கோட்ட எல்ஐசி அலுவலகம் முன்பு திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம், மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: காவிரி விவகாரம்; காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திருச்சியில் கடை அடைப்பு!