தஞ்சாவூர்: தமிழ்நாடு பிராமணர் சமாஜியத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் நேற்று (நவ. 27) நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிறுவன தலைவர் பழனி ஹரிஹர முத்து, மாநில பொதுச் செயலாளர் ரமேஷ், கேரள மாநில தலைவர் கரும்புரா ராமன், கர்நாடக மாநில இணை செயலாளர் ரவிக்குமார் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களாக சிலர் தொடர்ந்து பிராமணர்களை துவேசமாக பேசி வருவதாகவும், அதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சனாதான தர்மத்தையும் இழிவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், நிறுத்தவில்லை என்றால் அவர்களை சட்ட ரீதியிலும், போராட்டங்கள் வாயிலாகவும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு உடனடியாக அமல்படுத்திட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. கட்டாய மத மாற்றத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும், தஞ்சை மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்தை பிரித்து அதன் தலைமையில் புதிய வருவாய் மாவட்டத்தை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 2028-ல் நடைபெறவுள்ள உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழாவை மத்திய அரசு, தேசிய விழாவாக அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை இப்போது இருந்தே தொடங்கிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், பொது தீட்சிதர்களுக்கு கட்டுப்பட்டது என உச்ச நீதிமன்றம் அறிவித்த பின்னரும் அதன் நிர்வாகத்தில் தலையிடுவதையும், பொது தீட்சிதர்களை துன்புறுத்துவதையும் தமிழ்நாடு அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பெண்களின் ஆடை குறித்து சர்ச்சை பேச்சு - வருத்தம் தெரிவித்தார் பாபா ராம்தேவ்...