தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் உள்ள தனியார் பல்நோக்கு மருத்துவமனையில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக செந்தில்குமார் (42) என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டபோது அவர் எதிர்பாராவிதமாக உயிரிந்தார்.
இதனையடுத்து அவரது இறப்பிற்கு மருத்துவமனை தான் காரணம் என குற்றம்சாட்டி, மருத்துவக் கட்டணம் கட்ட அவரது உறவினர்கள் மருத்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களுக்கும், உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து ஆத்திரமடைந்த செந்தில்குமாரின் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தில் இருந்த மருத்துவனையின் தொலைபேசியை உடைத்தும், மருத்துவமனை ஆவணத்தை கிழித்தெறிந்தும் ரகளையில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கு பணியில் இருந்த ஊழியர்களை தாக்கவும் முயற்சித்தனர். மேலும் செந்தில்குமார் மருத்துவமனைக்கு வந்தவுடன் அவருக்கு ஊசி போட்டதாகவும், ஊசி போட்ட சில நிமிடங்களில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் கூறிய செந்தில்குமாரின் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மருத்துமனை நிர்வாகம் தரப்பில், சம்பவம் குறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, செந்தில் குமார் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து உடற்கூராய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவரின் மகளின் புகார்: இந்நிலையில் உயிரிழந்த செந்தில் குமாரின் மகள் சௌந்தர்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட தனது தந்தையை மருத்துவர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை. கட்டனம் செலுத்த வலியுறித்தினர். எனது தந்தை மருத்துவர்கள் செலுத்திய ஊசியினால் உயிரிழந்தாரா அல்லது மருத்துவமனைக்கு வரும்போதே அவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தாரா என்பது குறித்து எனக்கு சந்தேகமாக இருக்கிறது. என் தந்தையின் இறப்பிற்கு நியாயம் வேண்டும்” என்றார்.
மருத்துவர் அளித்த விளக்கம்: இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையின் மருத்துவர் நிஷாந்தி, செந்தில்குமாருக்கு அளித்த சிகிச்சை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “செந்தில்குமார் மருத்துவமனைக்கு வரும் போதே அவருக்கு மூச்சுத் தினறல் அதிகமாக இருந்தது” என்றார்.
அடுத்தக்கட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளும் முன் செந்தில்குமாரின் உறவினர்களிடம் தெரிவித்தாகவும், செந்தில்குமாரின் மேற் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்த போதிலும், செந்தில்குமாரின் உறவினர்கள் அவருக்கு சிச்சையை தொடருமாரு கேட்டு கொண்டதன் பேரில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து சிகிச்சை செந்தில்குமாருக்கு அடுத்த கட்ட சிகிச்சை வழங்கப்படும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதில் அவர் இறந்து விட்டதாக உறவினர்களோடு தெரிவிக்கவும், அவர்கள் மருத்துவமனை ஊழியர்களை தாக்குவது போன்ற செயலில் ஈடுபட்டதால் காவல்துறையிடம் புகார் அளித்ததாக கூறினார்.
மேலும் உடற்கூராய்விற்கு பிறகே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிப்பதிவுகளை மருத்துவமனை நிர்வாகம் செய்தியாளர்களுக்கு தர மறுத்து விட்டது. மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர், அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.