தஞ்சாவூர்: தீபாவளி திருநாள் இன்று (நவ.12) உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தஞ்சாவூர் மாநகராட்சி மகர்நோன்பு சாவடி பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்கள் உடன் மாநகராட்சி மேயர் ராமநாதன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். ஆதரவற்றோருக்கான இல்லத்தில் முதியவர்கள், கணவரால் கைவிடப்பட்ட விதவைப் பெண்கள், குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள், சாலைகளில் இருந்தவர்கள் என இந்த இல்லத்தில் 25-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், தங்களது குடும்பத்தோடும் குழந்தைகளோடும் தீபாவளியை கொண்டாட முடியவில்லை என்ற ஏக்கத்தில் இருந்தவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், இந்த இல்லத்தில் தங்கி இருக்கும் 25 பேருக்கு மேற்பட்டோருக்கு, தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் புத்தாடைகளை வழங்கி, அவர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினார்.
பின்னர் அவர்களின் குறைகளை கேட்டறிந்து, 'உங்களுக்கு நான் இருக்கிறேன்' என ஆறுதல் வார்த்தை கூறிய மேயர் ராமநாதன், அவர்களுடன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். முன்னதாக, புத்தாடை அணிந்து வந்த மேயர் ராமநாதன், ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியவர்களிடம் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர்களுக்கு காலை சிற்றுண்டியை பரிமாறி, முதியவர்களுக்கு ஊட்டிவிட்டு அவர்களிடம் சேர்ந்து தானும் உணவருந்தினார்.
இது குறித்து மேயர் ராமநாதன் கூறுகையில், 'இந்த தீபாவளி மகிழ்ச்சியான தீபாவளியாக அமைந்தது. ஆதரவற்றோர் இல்லத்தில் அவர்களுக்கு புத்தாடைகளை வழங்கி, மத்தாப்பு கொளுத்தி உணவு பரிமாறி, நானும் உணவு உண்டது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முதியோர்கள், தாய்மார்கள் அவர்களுக்கு பிள்ளையாகவும், தனக்கு அவர்கள் தாயாகவும் தந்தையாகவும் எண்ணி மகிழ்ந்து, தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தோம். அவர்களுடன் இணைந்து உணவு அருந்துவது என்பது தாயின் மடியில் குழந்தை உறங்குவதுபோல உணர்வைப் போன்ற மகிழ்ச்சியை எனக்கு தரும்' என்று கூறினார்.
பின்னர், முதியோர்களுடன் சேர்ந்து செல்பி புகைப்படமும் அவர் எடுத்துக் கொண்டார். பிறகு புறப்படும்போது, 'உங்களுக்கு நான் இருக்கிறேன், உங்களுடைய சுக துக்கங்களில் பங்கேற்பேன், கவலைப்படாதீர்கள்' என்று ஆறுதல் வார்த்தை கூற விட்டு மேயர் ராமநாதன் அங்கிருந்து சென்றார்.
இதையும் படிங்க: கோவையில் களைகட்டிய தீபாவளி திருநாள்.. தல தீபாவளி எப்படி இருந்தது?