பெரும் சிறப்பு வாய்ந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், கடந்த 1981 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தொடங்கிய அடுத்த ஆண்டிலிருந்தே ஓலைச் சுவடிகளை பாதுகாப்பதற்கென தனித்துறையும் உருவாக்கப்பட்டது. அங்கு பல்வேறு காலக்கட்டங்களில் பலரிடமிருந்தும் திரட்டப்பட்ட ஓலைச்சுவடிகளை, மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் பயன்பெறும் வகையில், காலவரைப்படி தொகுத்து, சுவடிகளை புரிந்து கொள்ளும் நுட்பமும் வகுக்கப்பட்டுள்ளது.
இங்கு பிற பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படாத, தமிழர்களின் வரலாறு, இலக்கியம், மருத்துவக் குறிப்புகள் பொதிந்துள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக குறுந்தொகை, ஆத்திசூடி உரை, இலக்கண சூடாமணி, அறுவகை இலக்கணம், நோயும் மருந்தும், தொல்காப்பியர் பொருளுரை, அகத்தியர் மருத்துவக் காவியம் போன்ற தமிழர்களுடைய வாழ்வியலை குறிக்கும் பல்வேறு வகை ஓலைச்சுவடிகள் உள்ளன.
சுவடிகள் 16, 17, 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதால், அதன் இயல்புத்தன்மை, குறிப்புகள் மறைவதைத் தடுக்கும் வகையில், மக்கிப் போகாமல் இருக்க திரவங்களை கொண்டு கிட்டத்தட்ட 8,000 கட்டு ஓலைச்சுவடிகள் குளிரூட்டபட்ட அறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அனைவரும் பயன்பெறும் வகையில் சுவடிகள் மின்னாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஓலைச்சுவடி பாதுகாப்பு மையத்திற்கு, 50 லட்ச ரூபாய் நிதியுதவி செய்து மின்னாக்கம் செய்ய உதவுகிறது. அதேபோன்று நேஷனல் மேனுஸ்கிரிப்ட் மிஷன் அமைப்பு, இம்மையத்தை அங்கீகரித்து ஆண்டு நிதியாக 7 லட்ச ரூபாயை வழங்கி வருகிறது.
கைக்கீறல் முறையிலான நம் அருந்தமிழ் அறிஞர்களின் பொன்னெழுத்துகள் அடங்கிய ஓலைச்சுவடிகளை, உலக பல்கலைக்கழகங்கள் பாதுகாக்க முனையும்போது, அதனை அறிந்து கொள்ளவாவது நாம் முனைய வேண்டும் என்பதே மொழி காப்போரின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: விவசாய நிலத்தில் புகுந்த சிறுத்தை: தீவிர கண்காணிப்பில் வனத்துறை!