தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலிலுள்ள வெங்கடாசலபதி சாமி திருக்கோயில், தமிழக திருப்பதி என்றும் தென்னக திருப்பதி என்றும் போற்றப்படுகின்றது. இந்த ஸ்தலத்தில் பெருமாள் நின்ற கோலத்தில், பூமிதேவி தாயாருடன் ஒரே சன்னதியில் அருள் பாலிக்கின்றார்.
மேலும், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்கு உரியது இந்த கோயில். இங்கு, மூலவர் பெருமாளுக்கு உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகின்றது. தமிழக வைணவ ஸ்தலங்களில் முதன்முதலில் இங்கு மட்டுமே துலாபாரம் அமைக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.
இத்தகைய பெருமைக்குரிய இந்த வைணவ ஸ்தலத்தில் ஆண்டு தோறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா நடைபெறுகின்றது. இது, சுமார் 10 நாட்களுக்குச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல, இந்த ஆண்டும் கடந்த 16ஆம் தேதி பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த, 8 நாட்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட திருவிழாவில், தற்போது 9ஆம் நாளான இன்று புரட்டாசி சிரவண நன்னாளில், உற்சவர் பெருமாள் பொன்னப்பர், பூமிதேவி தாயாருடன் 'கோ' ரதத்திற்குச் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர், விசேஷ பூஜைகள் செய்தி தீபாராதனை செய்த பிறகு நாதஸ்வர மேள தாள, மங்கள வாத்தியங்கள் முழங்க, தொடர்ந்து கோ ரத வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, பகலிராப் பொய்கையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. பின்னர், 10ஆம் நாளான 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மூலவர் திருமஞ்சனமும், நண்பகல் அன்னப்பெரும் படையலும், மாலை சப்தாவர்ணம், பிரகாரப் புறப்பாடும் நடைபெற்று, இந்த ஆண்டிற்கான புரட்டாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா இனிதே நிறைவு பெறுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.