தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளியில் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பூண்டி மாதா திருத்தலம், கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி 1999 முதல் பேராலயமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. மேலும் இந்த ஆலயத்தில் ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் ஒரு பகுதி பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இத்தாலி நாட்டை சேர்ந்த கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்ற வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில், அன்னையின் பிறப்பு பெருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் திருப்பலிகள் நடைபெற்று வந்தது. அதைப்போல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி நேற்று (செப். 8) இரவு நடைபெற்றது.
தொடர்ந்து, மல்லிகை பூ மற்றும் மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்டு, மாதா சொரூபம் வைக்கப்பட்ட அந்த தேரை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார். அப்போது வான வேடிக்கைகள் முழங்க, மக்கள் அன்னையே வாழ்க, மரியே வாழ்க என கோஷமிட்டனர். இந்த விழாவைத் தொடர்ந்து செப்டம்பர் 9 ஆம் தேதியான இன்று வரை நவ நாட்களாக கருதப்பட்டு 10 நாட்களுக்கு விழா நடைபெறுகிறது.
தினமும் திருப்பலியாக மரியா இறை நம்பிக்கையின் நங்கூரம், சீடத்துவத்தின் அடையாளம், மனிதநேயத்தின் உச்சம், உதவுவதில் முன்னோடி, ஆறுதலின் ஊற்று, மன வலிமையின் முன்மாதிரி, முன்னெடுப்பின் உதாரணம் மற்றும் ஒற்றுமையின் வழிகாட்டி ஆகிய தலைப்புகளில் திருப்பலி மைய கருத்து கொண்டு சிறப்பு ஆராதணைக் கூட்டங்கள் நடைபெற்றன. இன்று(செப். 9) காலை திருவிழா திருப்பலிக்கு பின் கொடி இறக்கம் நடைபெறும்.
இந்த தேர்பவனி நிகழ்ச்சியில் மறைமாவட்ட முதன்மை குரு இன்னோசென்ட், அதிபர் மற்றும் பங்கு தந்தை சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குநர் ஆல்பர்ட் சேவியர் உள்ளிட்ட தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் அதிபர், துணை அதிபர், உதவி தந்தையர்கள், ஆன்மீகத் தந்தையர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அன்னையின் பிறப்பு பெருவிழா மற்றும் ஆண்டு பெருவிழா ஆகியவை 2 முறை மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழா நாட்களில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, பூதலூர் ஆகிய ஊர்களில் இருந்து தினசரி சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா.. சப்பர பவனியுடன் கோலாகலம்!