தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், தமிழ்த்தேடி விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் நேற்று (பிப். 26) மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமையில் அறக்கட்டளை தலைவர் கோ.க.மணி, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம், தமிழ்ப் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன், தமிழ் வழி கல்வி இயக்கத் தலைவர் இளமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ், தமிழ்நாட்டில் தமிழைக் காணவில்லை என்றும், தமிழ் முழுமையாக வளர தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியை அதிகரித்திட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வி ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிய அவர், பெரும்பாலான அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியே நடைமுறையில் உள்ளது என வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மருத்துவப் பாடத்திட்டத்தின் கீழ் இதுவரை 14 மருத்துவ நூல்கள் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்று பேசிய ராமதாஸ், தமிழ்ப் பல்கலைக்கழகம் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளையும் தமிழில் படிப்பதற்குத் தேவையான நூல்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் தமிழ் ஆராய்ச்சிக்கு ஒரு பல்கலைக்கழகம் போதுமானது அல்ல எனத் தெரிவித்த அவர், குறைந்தது 5 பல்கலைக் கழகங்களையாவது தொடங்க வேண்டும் என்றும், தமிழ் வளர்ச்சிக்குக் கூடுதல் பல்கலைக்கழகங்கள் வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: "எங்கே.. ஜான் ரவி எங்கே.?" போராட்டத்தில் இறங்கிய தஞ்சை பாஜகவினர்!