தஞ்சாவூர்: உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மகர சங்கராந்தியையொட்டி, ஒரு டன் எடை கொண்ட காய்கறிகளுடன் நந்தி சிலைக்கு சிறப்பு அலங்காரமும் மகாதீபாராதனையும் செய்யப்பட்டது.
மகரசங்கராந்தி விழாவையொட்டி (Makar Sankranti festival), உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள (Thanjavur Big Temple) நந்தி சிலைக்கு (Thanjavur Big Temple Nandi Idol) 1000 கிலோ எடை கொண்ட பல்வேறு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. அந்த அலங்காரத்தில் காய்கறிகளுடன் பழங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகளும் இடம்பெற்றன.
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் பொங்கல் பண்டிகையை (Pongal Festival) முன்னிட்டு, நேற்று இந்த அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாய ஸ்ரீபெருவுடையார் ஆலயத்தில் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்களப்பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகளும் நடந்தது. இதனைத்தொடர்ந்து, மாட்டுப்பொங்கலான இன்று (ஜன.16) அதிகாலையில் பெருவுடையாருக்கும், பெரிய நாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தன.
இதனைத்தொடர்ந்து நெல்லிக்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், கேரட், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளாலும், லட்டு, ஆரஞ்சு, முறுக்கு, மைசூர்பாகு, அதிரசம் உள்ளிட்ட இனிப்பு வகைகளாலும், ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா, எலுமிச்சைப்பழம், அன்னாசிப் பழம், சர்க்கரை வள்ளி கிழங்கு உள்ளிட்ட பழ வகைகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகளும் செய்யப்பட்டன. பின், 108 பசுக்களுக்கு பட்டுத்துணி போர்த்தப்பட்டு சந்தனம், குங்குமம் ஆகியவை இடப்பட்டு 'கோ' பூஜையும் (Cow Pooja) நடந்தது.
இந்த சிறப்பு வழிபாடுகளில் அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகளும் திரளான பக்தர்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த குமார் என்ற பக்தர் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் தினத்தில், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மிகவும் சிறப்பாக நடக்கும். அப்போது 108 பசுக்களுக்கு 'கோ' பூஜை செய்யப்படும். மிகவும் விஷேசமான இந்த பூஜையையொட்டி, நந்திக்கு ஒரு டன் எடையில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து பெருவுடையாருக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடத்தப்படும். இந்த பூஜையில் கலந்துகொண்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இந்த சிறப்புமிக்க பூஜையைக் காண்பதற்காக ஆண்டுதோறும் இங்கு வருகிறோம்' என்று கூறினார்.
இக்கோயிலிலுள்ள பெருவுடையார் சந்நிதிக்கு நேர் எதிரே அமைந்துள்ள இந்த நந்தி சிலை ஒரே கல்லால் ஆனது. இதன் உயரம் 14 மீட்டர், 7 மீட்டர் அகலம் ஆகும். இதன் மொத்த எடை 20 டன் ஆகும். இந்தியாவிலேயே உள்ள லோபாஷி கோயில் நந்திக்கு (Lepakshi Temple Nandi Idol) அடுத்தபடியாக, இரண்டாவது மிகப்பெரிய இடத்தில் இந்த நந்தி சிலை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சிலை தஞ்சாவூரை ஆட்சி செய்த நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரால் அமைக்கப்பட்டது என்பது வரலாறு.
இதையும் படிங்க: குதிரைக்கும் பொங்கல் - இது மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்