தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பந்தநல்லூரில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காமல் வஞ்சிக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்தும், தண்ணீர் வழங்க கர்நாடக மாநில அரசிற்கு உத்தரவிட மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பந்தநல்லூர் பகுதியில் தொடர்ந்து குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதாகவுன், காவிரி நீர் இல்லாத காலத்தில் கூட, விவசாயத்திற்கான மின் மோட்டார்களை பயன்படுத்த முடியாத அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இப்பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் வழங்கவும், பந்தநல்லூரில் விரைந்து துணை மின் நிலையம் ஒன்றை அமைத்து, தடையில்லா உயர் அழுத்த மின்சாரம் கிடைக்க செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், பாரபட்சமின்றி அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு உள்ள தடுப்பணைக்கு அருகே அரசு கையகப்படுத்தும் விளை நிலத்திற்கு உரிய இழப்பீட்டை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் குறிச்சி, செறுகடம்பூர், நெய்க்குப்பை, பந்தநல்லூர், உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பந்தநல்லூர் கடை வீதியில் 20க்கும் மேற்பட்ட டிராக்டர்களை சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி, முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பந்தநல்லூர் - மணல்மேடு சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டது.
விவசாயிகளின் மின் பிரச்சினைக்கு விரைவு தீர்வு காணாவிட்டால், அடுத்த கட்டமாக மிகப் பெரிய அளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை திரட்டி போராட்டத்தை முன்னெடுப்போம் என உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ.ஆலயமணி தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பல்வேறு விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கோவையில் 18 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் - ஏன் தெரியுமா?