தஞ்சாவூர்: சக்கரங்கள் இல்லாமல் முழுவதும் மனித சக்தி கொண்டு மட்டும் தூக்கிச் செல்லும், அழகு நாச்சியம்மன் தூக்குத்தேர் திருவிழா நேற்று மாலை கும்பகோணம் அருகேயுள்ள நாகரசம்பேட்டை கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 5 டன் எடையும், 40 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான இந்த தேரை 15 தினங்கள் விரதம் மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாற்றி மாற்றி, போட்டி போட்டுக்கொண்டு வயல் வெளிகள், கிராம முக்கிய வீதிகள் வழியே தோள்களில் தூக்கி வர பவனி வந்தார், அழகுநாச்சியம்மன்.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 15 தினங்களுக்குச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் 157-வது ஆண்டாக இவ்விழா சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க் கிழமையான கடந்த மாதம் 25ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் காயத்திரியம்மன், வைஷ்ணவி, பார்வதி, மகிஷாவர்த்தினி, கிருஷ்ணன், துர்காதேவி, ராஜராஜேஸ்வரி என பல விதமான அம்மன் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா நடைபெற்றது.
தற்போது இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 15ம் நாளான நேற்று மாலை ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு நிற்க, சுமார் 5 டன் எடையும், 40 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட சக்கரம் இல்லா பிரமாண்டமான பெரிய தேரை வடம் பிடித்து இழுக்காமல், காப்புக்கட்டி 15 தினங்கள் விரதம் மேற்கொண்ட கீழவிசலூர், நாகரசம்பேட்டை, களைக்காட்டிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் மாற்றி மாற்றி தங்கள் தோள்களில் சுமந்தபடி, சுமார் 5 கி.மீ. தூரத்திற்குக் கிராம முக்கிய வீதிகள் மற்றும் வயல்வெளிகளின் வழியே தூக்கி வந்தனர்.
கோயிலில் இருந்து புறப்பட்ட தூக்குத்தேர் எந்த இடத்திலும் நிற்காமல் சென்றது. அழகு நாச்சியம்மனின் பிறந்த ஊரான கீழவிசலூருக்கு எள், நெல், பருத்தி, கரும்பு எனப் பல்வேறு சாகுபடி செய்யப்பட்ட வயல்களின் வழியே புகுந்து தேர் வந்தது. அப்படி வரும்போது பயிர்களுக்குச் சிறிதளவு சேதமானாலும், இப்பகுதி விவசாயிகள் அந்த சேதத்திற்காகக் கவலைப்படாமல், சுவாமியே தங்களுடைய வயல்களில் உலா வருவதால் இப்பயிர்கள் நல்ல விளைச்சலைத் தரும் எனத் திடமாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கை கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.