தஞ்சாவூர்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காசிநாதன் (வயது 35) என்ற இளைஞர், நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்குத் தஞ்சாவூர் மாவட்டம் ஒரு பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒரு இளம் பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் நண்பர்களாகப் பழகி வந்து உள்ளனர். பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார்.
இதனை அந்த பெண் மறுத்த உள்ள நிலையில் அந்த இளம் பெண்ணின் புகைப் படத்தை மார்பிங் செய்து அவரை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் காசிநாதன் பதிவிட்டு உள்ளார். மேலும் அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் குறித்தும் ஆபாசமான முறையில் பதிவிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் இது குறித்துக் கடந்த 1ம் தேதி தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
இதனை அடுத்து சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது காசிநாதன் அவரது சொந்த ஊரில் மறைந்து இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தஞ்சை சைபர் க்ரைம் காவலர் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று காசிநாதனைக் கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணை காரணமாக இளம் பெண்ணை மார்பிங் செய்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டம் மற்றும் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன்பு காசிநாதனை ஆஜர்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். திருமணத்திற்கு மறுத்த பெண்ணை பழி வாங்கும் விதமாகப் புகைப்படத்தைத் தவறாக மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சம்பவம் தஞ்சைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தனியார் வங்கியில் நகை கொள்ளையடித்த வழக்கில் கைதானவரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்