தஞ்சாவூரை அடுத்த பள்ளியக்ரஹாரம் காந்திநகரைச் சேர்ந்த லாரி மெக்கானிக் குணசீலன்(25). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் லாரி பழுதுபார்க்கும் பட்டறையில் லாரி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இதையடுத்து இன்று வழக்கம் போல், வேலைக்குச் சென்ற குணசீலனை, அதே ஊரைச் சேர்ந்த மூன்று நபர்கள், முன்விரோதம் காரணமாக இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த குணசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு காவல்துறை பொறுப்பு துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி, நடுக்காவேரி காவல் ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற காவல் துறையினர் குணசீலனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் லாரி மெக்கானிக் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:முதியவர்கள் மரணத்தில் சந்தேகம்